search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனைத்து கட்சிகள்"

    மேற்கு வங்காள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்கானா முதல்வர், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆகியோர் பா.ஜனதாவுக்கு எதிராக இணைய வேண்டும் என்று மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி கூறினார்.
    பெங்களூர்:

    மதசார்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவர் குமாரசாமி பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க கவர்னர் வஜுபாய் வாலா அழைப்பு விடுத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. கர்நாடக விவகாரத்தில் மத்திய அரசு தவறாக நடந்து கொள்கிறது. நாட்டில் ஜனநாயகத்தை அழிப்பதற்கு மத்திய அரசு விரும்புகிறது.

    கவர்னரை சந்தித்து எங்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பது தொடர்பான பட்டியலை அளித்தேன். ஆனால் எங்களை ஆட்சியமைக்க அவர் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாதோருக்கு ஆட்சி அமைக்க அவர் வாய்ப்பு அளித்துள்ளார். மேலும் பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசமும் அளித்துள்ளார். நம் நாட்டில் இதுபோல நடந்திருப்பது இதுதான் முதல்முறை.

    கவர்னர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தது வியாபாரம் பேசுவதற்கு வழிவகுக்கும். அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துகிறது. எம்.எல்.ஏ.க்களை மிரட்டுவதற்கும், நிர்பந்தம் அளிப்பதற்கும் தான் விசாரணை அமைப்புகளை மத்திய அரசு பயன்படுத்துகிறது.

    காங்கிரஸ் எம்.எல்.ஏ. அனந்த்சிங்குக்கு எதிராக வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. இதனால் அமலாக்கத்துறையை கொண்டு அவரை மிரட்டுகிறது. அனந்த்சிங்குடன் நான் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தான் இதை என்னிடம் தெரிவித்தார். எங்கள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் மத்திய அரசு மிரட்டுகிறது.

    பா.ஜனதா அல்லாத கட்சிகள் இந்த விவகாரத்தில் கரம் கோர்க்க வேண்டும். இதற்கான முயற்சியை எனது தந்தை தேவேகவுடா முன்னெடுக்க வேண்டும். மாநில கட்சிகளின் தலைவர்கள், மாநில முதல்வர்களை அவர் ஒருங்கிணைக்க வேண்டும்.

    மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, பிஜு ஜனதா தளம் தலைவர் நவீன் பட்நாயக் ஆகியோர் பா.ஜனதாவுக்கு எதிராக இணைய வேண்டும்.

    தேசத்தின் பாதுகாப்பை அவர்கள் பாதுகாக்க வேண்டும். தங்களுக்கு இடையேயான வேறுபாடுகளை மறக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×